ஜெயித்திடு மனமே !

கடவுளின் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் விதியைக்
கண்டு அஞ்சாதே

நீ தரிக்கும் போதே
உனக்கான மரண ஓலை
எழுதப்பட்டுவிட்டது
அதை தீயில் பொசுக்கிவிட்டுப்
புதிய ஓலை எழுத புறப்படு

உன்னில் துயில்கொள்ளும் 
கிரகணங்களை கண்டு
அடங்கிவிடாதே அதையே
ஆட்டிவைக்க பொறந்தவன் நீ
முடிந்தால் உன் கரையில்
கலங்கரை விளக்காக நில்

அத்தனை துன்பங்களையும்
அடைத்து வைக்க முடியாத
பானை உண்டென்று சொன்னால்
அது உன் இதயம் தான்
வெடித்து சிதறும் வரை
விரட்டிக்கொண்டே இரு

சந்தோசத்தை தவிர
எல்லா தோஷமும் உன்னை
முடக்கிப் போட்டாலும்
முட்டிக்கொண்டு உயிர்த்தெழு
பீனிக்ஸ் பறவையாக

வெற்றிக்கு பின்னால்
வரும் தோல்விகளுக்கு
உயிரை ஊற வைத்த பின்
எதற்கு பயம் துணிந்து போராடு
விடியலை தேடும் நிலவாக 

நேற்றும் உண்டு
நாளையும் உண்டு
இன்று மட்டும் மாற்றமில்லை
மாறவேண்டும்
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை
ஜெயித்திடு மனமே !

நம் புதிய தலைமுறை !

பச்சை பசேர் புல்வெளியில் படுத்துறங்கும் நெல் மணிகள் 
பறந்து விரிந்த வானில் பக்குவமாய் இரை தேடும் பறவைகள் 
ஓட்டு மொத்த விடியலையும் தன்வசமாக்கிக்கொண்ட கிழக்கு 
தடம் புரளாமல் கடகடவென ஓடும் ரயில் வண்டி 
காற்றோடு பேசும் கல் நொங்கு 
அறக்கப் பறக்க ஆவி பொங்கும் பனிமூட்டம் 
பதட்டத்துடனே கால்வைக்கும் தவளைகள் 
குருவியும் கிளியும் கொஞ்சி பேசும் காதல் லீலை 
அடி வேர் வரை அசைக்க துடிக்கும் மூங்கிலசத்தம் 
நாணத்தில் தலை குனியும் சூரியகாந்தி 
மனமே மருந்தாகப் பூக்கும் மலர் கொத்து 
மன்னிக்க முடியாத பட்டாம்பூச்சியின் பசி 
கோரைபுல் நுனியில் குடும்பம் நடத்தும் நீர்க்குமிழி 
நினைவை மட்டுமே பரிசாக கேட்கும் ஈரநிலா 
நட்சத்திரங்களை தேடும் மண் குதிரையின் அழுகை 
பால் சுரந்த மடுவில் தமிழ் பேசும் கன்றுக்குட்டி 
நீந்த மனமில்லாமல் ஏங்கி தவிக்கும் சலவைக்கல் 
வெயில் வரைந்த நிழல் ஓவியம் 
அங்கங்கே முட்டையிடும் வான்கோழி 
ஆக ஓகோ வென ஆடமறந்த காவல் பொம்மை 
பாண்டி விளையாடும் பள்ளி மான்கள் 
படிக்காத தாய் தந்தையின் ஆதார கையெப்பம் 
ஒடிந்த கிளையில் ஊஞ்சல் ஆடும் குருவிக்கு கூடு 
வளர்த்த மண்ணிற்கு வாழ்த்து சொல்லும் செந்தூரப்பூ 
அள்ளி முடிந்த கூந்தலில் துள்ளி திரியும் பட்டன் ரோஜா 
உதட்டிற்கு சாயம் பூசும் நாவல்பழம் 
அய்யனார் துணையிருக்க மொட்டவிழ்க்கும் தாமரை 
கால் சட்டையில் நிரம்பி வழியும் புளியம் பழம் 
ஆனா ஊனா கற்றுக் கொடுத்த கூழாங்கற்கள் 
அலையா விருந்தாளியாக படுக்கையில் காத்திருக்கும் மூட்டை பூச்சி 
ஏசி காற்றில் ஊசி குத்தும் மலைச்சாரல் 
தோலாடையே மேலாடையாக துயிலுரிக்கும் மண் கலப்பை 
இயற்கை கனிகளுடன் இளைப்பாறும் அணிகள் 
அத்தனையும் இழந்து பட்டணத்தில் பட்டன் தட்டிக்கொண்டிருக்கிறது 
நம் புதிய தலைமுறை !

வாழாவெட்டனாக !

மொட்டை வெயில் 
பட்டிக்காட்டில் 
அண்ணார்ந்து பார்த்த 
வானவூர்தியில் இன்று நான் 
அரைக்கால் டவுசர் 
முழுக்கால் பேண்ட் 
வெட்டி பந்தா 
எல்லாம் சேர்த்து 
முழுக்குப்போட்டது என்  
பள்ளிப் படிப்பை 
அரைகுறை படிப்போடு 
அயல் நாட்டைத் 
தேடிச் சென்றேன் 
முதலில் பவுசாகத்தான் இருந்தது 
பின்பு தான் புரிந்தது 
நம் சொந்தங்கள் எல்லாம் 
இந்த ஆண்ட்ராய்டு 
போனுக்குள் அடங்கியது தான்  
சொகுசு என நினைத்து 
வாழத் தொடங்கினேன் 
முதலில் இனித்தது 
பிறகு போகப்போக 
கசந்தது 
அழுதேன் 
அணைத்துக்கொள்ள 
அன்னை இல்லை 
புலம்பினே 
புத்தி சொல்ல 
தங்கை இல்லை 
சரி எல்லாம் விதி என்றேன் 
விட்டுக்கொடுக்க 
நண்பன் இல்லை 
விரட்டியடித்த தந்தையை எண்ணினேன் 
ஐயோ படித்திருந்தால் 
பட்டிக்காட்டிலே 
சொர்க்கம் போல் வாழ்ந்திருக்கலாமே 
என்ற எண்ணம் வந்துவந்து போக 
வயது முப்பதை தாண்டியது
காதல் சோகம் 
கண்ணை கிழிக்க 
வயது சோகம் 
பெண்னைக் கழிக்க
வாழ்ந்தும் வாழமலும் 
வாழ்கின்றேன்
வாழாவெட்டனாக !

உயிர்த்திசை !

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்
விடியலை தந்தவள் நீயல்லவோ
படைத்தவன் துணையில் எனை வளர்க்க
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே

உடுத்தும் ஆடை அழகினிலே உன்
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான்
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன்
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே

ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன்
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ்
உலகத்தில் நானும் வளம் வரவே உன்
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே

எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன்
எல்லையில்லா தியாகத்தை அதை
எண்ணி நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா

பாலும் தேனும் கலந்தூட்டி என்
பாவக்கணக்கை முடித்துக்கொள்ள
பாவி நானும் துடிக்கிறேன் உன்
பார்வை இன்றி தவிக்கிறேன் தாயே !

ஒரு நிலா!

உயிர்கள் 
விளையாடும் காட்டில்
ஒரு பொம்மை 
பூவாய் பூத்திருக்கிறேன்
பரித்துக் கொள்ள 
விரல்கள் வருவதற்குள்
விதி விளையாடிவிட்டது 
விதவை கோலத்தில் 
ஒரு நிலா!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...