படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018
படைப்பு வளம் - வசீகரன்
தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து விரிந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான், அவனது உலகம் பெரியது கவிவடிவம் சிறியதாக இருக்கலாம் தான். காட்சி வடிவம் உலக அளவில் பெரியதாகவே இருக்கிறது.நம் படைப்பாளனுக்கு படைப்பு வறுமை என்பது இல்லவே இல்லை.

காண்பது, கேட்பது, பேசுவது, அறிவது, புரிவது என எல்லாமே அவன் உள்ளத்தில் ஹைக்கூப் பூக்களாகத் துளிர்க்கின்றன, பொருள் சிக்கனம் என்பது அவனிடம் இல்லவே இல்லை. அவனது கற்பனைக்கு வானம் கூட இல்லை எல்லை எனலாம்.

இயற்கை நயம், தத்துவம், வளமை, வறுமை,சோகம், மகிழ்ச்சி, நையாடல் என எல்லாமே ஹைக்கூ. 

படைப்பாளனுக்கு கை கொடுக்கின்றன. எண்ண எண்ண இனிக்குது என்பது போல் 'அட இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்' என்ற உந்துதலை வாசிப்பவனுக்குள் அழுத்தமாகப் பதிக்கின்றன.

மின்மினிக் கனவுகள் என்றொரு ஹைக்கூ நூல் கைகளுக்குள் வந்தது
2017 ஆம் ஆண்டின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூலில் 4"00" ஹைக்கூக்கள் குவிந்து கிடக்க்ர்ன்றன. நாம் முன் பத்தியில் சொன்ன மாதிரி அத்தனையையும் ஹைக்கூவாகப் படம் பிடித்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியரின் பெயர் : "ஹிஷாலி"

2011 இல் இருந்து எழுதுகோலை கையில் தூக்கி இருக்கும் இந்தப் பெண்கவிக்கு இதுதான் முதல் நூல் என்பது வியப்பு, அதற்குள் "மித்ரா"   துளிப்பா விருதை எல்லாம் வாங்கி வைத்திருக்கும் புத்திசாலிப் பாவலர் என்றும் சொல்லலாம்.

இந்த நூலுக்குள் நுழைந்து சில ஹைக்கூ மின்மினிகளை பிடித்துக் கொண்டு வந்து பார்க்கலாமா?

மரித்த பின்பு
உயிர்த் தெழுகிறாள்

இது ஒரு ஹைக்கூவின் முதலிரு அடிகள் அட .... என்னவொரு முரணில் மலர்ந்திருக்கிறது வரிகள். இறந்த பின்பு உயிர்த்தெழல் என்றால் இயேசுனாதரா? என்ற கேள்வி எழுகிறதா? பெண்பாலில் அல்லவா இரண்டாம் அடி நிறைவாகி நிற்கிறது,? யார் அவள்?
விழிபிதுங்கிய ஈற்றடியைத் தேடுகிறது 

நீதி தேவதை 

இது தான் அந்த நெத்தியடியான ஈற்றடி. எத்தனை வழக்குகள் ..... வாய்தாக்களால் நீதி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது.
நீதி கிடைக்கும் போது வாதியின் ஆயூளோ பிரதிவாதியின் ஆயுளோ கூட முடிந்து போயிருக்கலாம் தானே. எனவே காலம் தாழ்த்திக் கிடைத்தாலும் அந்த நீதியும் செத்த நீதிதான் செத்தபின்பு யார்தான் வாழ்த்துவது?

சிந்தனைப் பொறியில் தீப்பற்ற வைக்கும் ஹைக்கூ இது.

கடுமையான குளிர் 
போர்த்திக் கொள்கிறது 

என்ற இரு அடிகளைப் படித்துவிட்டு, மானோ? மயிலோ? குயிலோ? என்று உங்களுக்குள் நீங்களே கேட்டுக் கொண்டால் அது தான் கவிஞரின் வெற்றி. ஆனால் அவரோ வேறு பதில் ஈற்றடியாய் சொல்ல்வார். நம் ஹிஷாலி சொல்கிறார்....

மேகம்

"மேகம் " என்பது தான் அது தரும் ஈற்றடி. என்ன நையாண்டி . மேகத்தின் வரவால்தானே வெப்ப நிலை இறங்கி குளிர் தாளாமல் போர்த்திக் கொள்கிறது என்பது தான் நம் கவிஞரின் மித நயமான மிஞ்சிய கற்பனை . மற்றொரு கவியிலும் மழையை அழகாக்க காட்சிப்படுத்துகிறார் பாருங்கள்.

கிழிந்த வானம்
தைத்துக் கொண்டிருக்கின்றன
மழைத்துளிகள்

என்ன ஓர் இயற்கை எழில் காட்சிப் பதிவு  வானம் கிழிந்தது " என்பது இடி மின்னலை எடுத்துக் காட்டும் ஒரு பழஞ்சொற் பதிவுதான். அந்தக் கிழிசலை தைப்பதாகக் கூறி , மழைத் துளிகளையே நூலாக்க கொண்டுவந்த கவிஞரின் நேர்த்தியான கற்பனைத் திறன் சுவைக்கிறது அல்லவா ? 

நிரம்பிக் கிடக்கும் கவிக்குவியல்களின் நடுவில் பல மின்மினிப் பூச்சிகள் ஒளி வெட்டிக் கொண்டே ஊடுருவிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

மண் குதிரை / ஏறி இறங்கியது / சிறுவர் மனசு -  எனக் கூறி நம்மையும் சிறுவர் ஆக்குகிறார்.

புதுமனைப் புகுவிழா / நிரம்பி வ்ழிகிறது / வாங்கிய கடன் - எனக் கூறி சொந்த வீடு கட்டும் திண்டாட்டத்தை ஒற்றைச் சொல்லில் முன் நிறுத்துகிறார்.

அசையும் விழிகள் நடுவே / அசையாமல் நிற்கிறது / ஒரு கனவு - என்று கூறி தனி ஒரு மனிதனின் கனவுத் தேடல்களில் நுழையும் கனவுகளை காட்சிப்படுத்துகிறார்.

அன்னதானம் / பசியோடு நிற்கிறது / கோவில்மாடு - என்று கூறி உயிர் நேயத்தைப் பதிக்கிறார்.
ஹிஷாலி பலசாலியாக வருவார் என்றே தோன்றுகிறது. பெயரில் நுழைத்திருக்கும் வட உச்சரிப்பு எழுத்துக்கள் தான் அந்நியப்படுத்துகின்றன. 

கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019

கலாச்சர மோகம் 
முதல் பலி
பூப்படையாதப் பெண்
யாருமற்ற ஏரியில்
இலவசமாக படகோட்டும்
வாத்துக்கூட்டம்
கொழுந்து வெற்றிலை
சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது
புது பெண் முகம்
பறவையின் புலம்பல்
அருகே முனுமுனுக்கும் 
தொட்டால் சிணுங்கி
சீமந்த விழா
முதிர் கன்னியின் கையில்
கல்யாண வளையல்

நான் நீ இந்த உலகம் !

உன் பார்வையின் சரித்திரம்
புரிந்திருந்தால் விலகிருப்பேன் 
நான் நீ இந்த உலகம்
இவற்றில் இருந்து !

அம்மா !

சவமும் சாமியும்
ஒன்றெனக் கருதி
கலங்கி நிக்கிறேன்
கண்ணெதிரில் அம்மா !

ஜெயித்திடு மனமே !

கடவுளின் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் விதியைக்
கண்டு அஞ்சாதே

நீ தரிக்கும் போதே
உனக்கான மரண ஓலை
எழுதப்பட்டுவிட்டது
அதை தீயில் பொசுக்கிவிட்டுப்
புதிய ஓலை எழுத புறப்படு

உன்னில் துயில்கொள்ளும் 
கிரகணங்களை கண்டு
அடங்கிவிடாதே அதையே
ஆட்டிவைக்க பொறந்தவன் நீ
முடிந்தால் உன் கரையில்
கலங்கரை விளக்காக நில்

அத்தனை துன்பங்களையும்
அடைத்து வைக்க முடியாத
பானை உண்டென்று சொன்னால்
அது உன் இதயம் தான்
வெடித்து சிதறும் வரை
விரட்டிக்கொண்டே இரு

சந்தோசத்தை தவிர
எல்லா தோஷமும் உன்னை
முடக்கிப் போட்டாலும்
முட்டிக்கொண்டு உயிர்த்தெழு
பீனிக்ஸ் பறவையாக

வெற்றிக்கு பின்னால்
வரும் தோல்விகளுக்கு
உயிரை ஊற வைத்த பின்
எதற்கு பயம் துணிந்து போராடு
விடியலை தேடும் நிலவாக 

நேற்றும் உண்டு
நாளையும் உண்டு
இன்று மட்டும் மாற்றமில்லை
மாறவேண்டும்
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை
ஜெயித்திடு மனமே !

நம் புதிய தலைமுறை !

பச்சை பசேர் புல்வெளியில் படுத்துறங்கும் நெல் மணிகள் 
பறந்து விரிந்த வானில் பக்குவமாய் இரை தேடும் பறவைகள் 
ஓட்டு மொத்த விடியலையும் தன்வசமாக்கிக்கொண்ட கிழக்கு 
தடம் புரளாமல் கடகடவென ஓடும் ரயில் வண்டி 
காற்றோடு பேசும் கல் நொங்கு 
அறக்கப் பறக்க ஆவி பொங்கும் பனிமூட்டம் 
பதட்டத்துடனே கால்வைக்கும் தவளைகள் 
குருவியும் கிளியும் கொஞ்சி பேசும் காதல் லீலை 
அடி வேர் வரை அசைக்க துடிக்கும் மூங்கிலசத்தம் 
நாணத்தில் தலை குனியும் சூரியகாந்தி 
மனமே மருந்தாகப் பூக்கும் மலர் கொத்து 
மன்னிக்க முடியாத பட்டாம்பூச்சியின் பசி 
கோரைபுல் நுனியில் குடும்பம் நடத்தும் நீர்க்குமிழி 
நினைவை மட்டுமே பரிசாக கேட்கும் ஈரநிலா 
நட்சத்திரங்களை தேடும் மண் குதிரையின் அழுகை 
பால் சுரந்த மடுவில் தமிழ் பேசும் கன்றுக்குட்டி 
நீந்த மனமில்லாமல் ஏங்கி தவிக்கும் சலவைக்கல் 
வெயில் வரைந்த நிழல் ஓவியம் 
அங்கங்கே முட்டையிடும் வான்கோழி 
ஆக ஓகோ வென ஆடமறந்த காவல் பொம்மை 
பாண்டி விளையாடும் பள்ளி மான்கள் 
படிக்காத தாய் தந்தையின் ஆதார கையெப்பம் 
ஒடிந்த கிளையில் ஊஞ்சல் ஆடும் குருவிக்கு கூடு 
வளர்த்த மண்ணிற்கு வாழ்த்து சொல்லும் செந்தூரப்பூ 
அள்ளி முடிந்த கூந்தலில் துள்ளி திரியும் பட்டன் ரோஜா 
உதட்டிற்கு சாயம் பூசும் நாவல்பழம் 
அய்யனார் துணையிருக்க மொட்டவிழ்க்கும் தாமரை 
கால் சட்டையில் நிரம்பி வழியும் புளியம் பழம் 
ஆனா ஊனா கற்றுக் கொடுத்த கூழாங்கற்கள் 
அலையா விருந்தாளியாக படுக்கையில் காத்திருக்கும் மூட்டை பூச்சி 
ஏசி காற்றில் ஊசி குத்தும் மலைச்சாரல் 
தோலாடையே மேலாடையாக துயிலுரிக்கும் மண் கலப்பை 
இயற்கை கனிகளுடன் இளைப்பாறும் அணிகள் 
அத்தனையும் இழந்து பட்டணத்தில் பட்டன் தட்டிக்கொண்டிருக்கிறது 
நம் புதிய தலைமுறை !

வாழாவெட்டனாக !

மொட்டை வெயில் 
பட்டிக்காட்டில் 
அண்ணார்ந்து பார்த்த 
வானவூர்தியில் இன்று நான் 
அரைக்கால் டவுசர் 
முழுக்கால் பேண்ட் 
வெட்டி பந்தா 
எல்லாம் சேர்த்து 
முழுக்குப்போட்டது என்  
பள்ளிப் படிப்பை 
அரைகுறை படிப்போடு 
அயல் நாட்டைத் 
தேடிச் சென்றேன் 
முதலில் பவுசாகத்தான் இருந்தது 
பின்பு தான் புரிந்தது 
நம் சொந்தங்கள் எல்லாம் 
இந்த ஆண்ட்ராய்டு 
போனுக்குள் அடங்கியது தான்  
சொகுசு என நினைத்து 
வாழத் தொடங்கினேன் 
முதலில் இனித்தது 
பிறகு போகப்போக 
கசந்தது 
அழுதேன் 
அணைத்துக்கொள்ள 
அன்னை இல்லை 
புலம்பினே 
புத்தி சொல்ல 
தங்கை இல்லை 
சரி எல்லாம் விதி என்றேன் 
விட்டுக்கொடுக்க 
நண்பன் இல்லை 
விரட்டியடித்த தந்தையை எண்ணினேன் 
ஐயோ படித்திருந்தால் 
பட்டிக்காட்டிலே 
சொர்க்கம் போல் வாழ்ந்திருக்கலாமே 
என்ற எண்ணம் வந்துவந்து போக 
வயது முப்பதை தாண்டியது
காதல் சோகம் 
கண்ணை கிழிக்க 
வயது சோகம் 
பெண்னைக் கழிக்க
வாழ்ந்தும் வாழமலும் 
வாழ்கின்றேன்
வாழாவெட்டனாக !

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...